Sunday, August 26, 2018

நிலக்கடலை பற்றிய இன்றைய தகவல்

நிலக்கடலை பற்றிய எனது கருத்து

##தமிழகத்தில் நிலக்கடலை 2.17 லட்சம் எக்டேர் பரப்பளவில் பயிர் செய்யப்படுகிறது. எக்டேருக்கு 2 ஆயிரம் கிலோவாக இருந்த உற்பத்தி பருவநிலை மாற்றம் காரணமாக 685 கிலோவாக குறைந்துள்ளது. உயர் விளைச்சல் ரகங்கள் பயன் படுத்தாதது, தொழில்நுட்பங்களை சரியான நேரத்தில் கடைப்பிடிக்காதது,
பூச்சி மற்றும் நோய்களுக்கு கட்டுப்படுத்துவதில் உள்ள சிரமங்கள் போன்றவை மகசூல் குறைவு காரணிகளாக உள்ளன.

##மகசூல் பெறுவது எப்படி
நிலத்தை சமன்படுத்துதல், பார் – சால் அமைப்பு முறை, தரமான விதை தேர்வு, விதை அளவை நிர்ணயிப்பது, விதைத்த மூன்று நாட்களில் முளைக்காத விதைகளை கண்டறிந்து அகற்றிவிட்டு மீண்டும் நடவு செய்தல் மூலம் பயிரின் எண்ணிக்கையை பராமரிக்கலாம். தரமான விதைகளை தேர்ந்தெடுத்தல், சரியான இடைவெளியில் நடவுமுறை, களை மேலாண்மை, உர மேலாண்மை, நீர் மேலாண்மை முறைகளை சரியான நேரத்தில் கடைப்பிடித்தல் மூலம் பூக்களை அதிகரிக்கலாம். விழுது இறங்கும் நேரத்தில் உரமேலாண்மை, நீர் மேலாண்மை மற்றும் பூச்சி, நோய் மேலாண்மைகளை கடைப்பிடிப்பதன் மூலம் கடலையின் எடையை அதிகரிக்கலாம். இந்த மூன்று காரணிகளை நினைவில் வைத்து கடலை பயிரிடும்போது நடைமுறைப்படுத்தினால் விளைச்சல் 50 சதவிகிதம் அதிகரிக்கும்.
##விதை நேர்த்தி, அளவு
டி.எம்.வி 7, டி.எம்.வி.10, சி.ஓ.3, வி.ஆர்.ஐ.2, வி.ஆர்.ஐ.3, எ.எல்.ஆர்.3 ஆகிய ரகங்கள் பயிரிடப்படுகிறது. கடலை விதைப்பதற்கு கார்த்திகை பட்டமே (நவம்பர், டிசம்பர்) சிறந்தது. துாத்துக்குடி உள்ளிட்ட சில மாவட்டங்களில் கார்த்திகை மாதமே விதைக்கின்றனர். அதிக மழையும், அதிக வெயிலும் பயிருக்கு உகந்ததல்ல. கம்பு, கேழ்வரகு பயிருக்கு பின் கடலை பயிரிட்டால் அதிக மகசூல் கிடைக்கும்.
எந்தவொரு பயிருக்கும் விதையே பிரதானம். கடலை பயிரிலும் விதையை தேர்ந்தெடுப்பதில் மிகுந்த கவனம் செலுத்தவேண்டும். சுருக்கம் விழுந்த மற்றும் காயம்பட்ட பருப்புகளை விதைக்கக்கூடாது. உருண்டையான பருப்புகளே ஏற்றது. ஒரு ஏக்கருக்கு 50 கிலோ விதை தேவைப்படும். பருப்பு பெரியதாக இருந்தால் 60 முதல் 65 கிலோ விதைகள் தேவைப்படும்.
##நடவு வயல் தயாரிப்பு
நடவு இடைவெளி ஒரு சதுர மீட்டருக்கு 30-35 செடிகள் போதும். பாருக்குள்ளே இருக்கும் இடைவெளி 30 செ.மீ., செடிகளுக்கு இடையே 10 செ.மீ., இடைவெளி போதும்.1 கிலோ விதை பருப்புக்கு 4 கிராம் டிரைக்கோடெர்மா விரிடி,10 கிராம் சூடோமோனாஸ் புளூரோசென்ஸ் கொண்டு விதை நேர்த்தி செய்து உடனே விதைக்க வேண்டும்.
இதனால் வேர் அழுகல், சேர் அழுகல் நோய் பாதிப்பு இராது. வயலில் நடுவதற்கு முன் 3-4 முறை நாட்டு உழவு போட வேண்டும். ஒரு ஏக்கருக்கு 5 டன் இயற்கை எரு அல்லது 50 கிலோ டி.ஏ.பி., 15 கிலோ பொட்டாஷ், 25 கிலோ கந்தகம் / ஜிப்சம் ஆகியவற்றை கடைசி உழவின் போது இட வேண்டும்.
பார் – சால் விதைப்பு தண்ணீர் குறைவாக உள்ள இடங்களில் சிறந்ததாக உள்ளதால் 60 செ.மீ., இடைவெளியில் பார் மற்றும் சால் அமைத்து விதை நடவு செய்ய வேண்டும்.
##நீர் மேலாண் நிர்வாகம்
கடைசி உழவின் போது இயற்கை எரு இடுவதால் மண்ணின் காற்றோட்டம் அதிகரித்து நீர் தேவை குறையும். விதையை 4 செ.மீ., ஆழத்தில் விதைப்பது அவசியம். கடலை பயிரினை 3 வகையான வளர்ச்சி பருவங்களாக பிரித்து தண்ணீர் விட வேண்டும். பூக்கும் பருவத்திற்கு முன் அதாவது 1-25 நாட்களுக்குள், விதைக்கும் போது, விதைத்த பிறகு, விதைத்த 20 நாட்களுக்கு பிறகு நீர் பாய்ச்ச வேண்டும். பூக்கும் பருவத்தில் 26-60 நாட்களில் ஒருமுறை நீர் பாய்ச்ச வேண்டும். காய் உருவாகும் சமயத்தில் 61-105 நாட்கள் முறையே இரண்டு முறை நீர் பாய்ச்ச வேண்டும். அதிகமான தண்ணீர் ஆரம்ப கட்டத்தில் கட்டினால் தழை வளர்ச்சியை அதிகப்படுத்தி மகசூலை குறைத்து விடும். எனவே, விழுது விழும் சமயம், பூக்கும் பருவம், காய் உருவாகும் சமயத்தில் நீர் பாய்ச்சினால் கடலையில் நல்ல மகசூல் எடுக்கலாம்.
##உர மேலாண் அவசியம்
ஏக்கருக்கு 50 கிலோ தழைச்சத்து, 35 கிலோ சாம்பல் சத்து ஆகியவற்றை பூக்கும் பருவத்திற்கு முன் (நட்ட 25 நாட்கள்), பூக்கும் பருவத்தில் (நட்ட 45 நாட்கள்) இட்டால் நல்ல மகசூல் கிடைக்கும். கடலையை விதைத்த பின் ஆரம்ப வளர்ச்சி கட்டத்தில் களை பிரச்னை அதிகமாக இருக்கும். நட்ட முதல் 25 நாட்களுக்குள் முதல் களையெடுப்பு அவசியம். இரண்டாவதாக நட்ட 40-50 நாட்களுக்குள் களையெடுத்து நன்றாக மண் அடைத்து ஜிப்சத்தை மேலுாரமாக ஏக்கருக்கு 15 கிலோ என்றளவில் இட்டு, பின் இரண்டாம் தண்ணீர் பாய்ச்சிட வேண்டும். விழுது இறங்கும்
சமயத்தில் இதை கடைப்பிடித்தால் கடலையின் வளர்ச்சி நன்கு ஊக்குவிக்கப்பட்டு கடலை திரட்சி அடைவதற்கும், எடை அதிகரிப்பதற்கும் உதவும். கம்பு, சூரிய காந்தி, கடுகு பயிர்களை 6:2 என்ற இடைவெளியில் ஊடுபயிராக வளர்க்கலாம்.
##அறுவடை நாள் மகிழ்ச்சி
வயதான இலைகள் காய்ந்து உதிர்தல் மற்றும் மேல்மட்ட இலைகள் மஞ்சளாதல் ஆகியன அறுவடைக்கான அறிகுறி. குத்துமதிப்பாக நான்கு செடிகளை பிடுங்கி பார்த்தால், கடலை காயானது கரும்பழுப்பு நிறத்தில் இருந்தால் கடலை அறுவடைக்கு தயாராகி விட்டது. அறுவடைக்கு முன்னதாக நீர் பாய்ச்சினால் செடியை எளிதாக பிடுங்கி அறுவடை செய்யலாம். அறுவடை செய்த பின் 4-5 நாட்கள் சூரிய ஒளியில் உலர்த்த வேண்டும். கடலை நன்றாக உலர்ந்த பின் சாக்குப் பையில் நிரப்பி, தரையில் மணல்போட்டு அதன் மேல் சேமித்து வைக்கலாம். கடலையில் விட்டமின் ‘பி’ சத்து அதிகளவு உள்ளது. குறிப்பாக தையாமின், நிக்கோடினிக் அமிலம் அதிகளவு உள்ளது. 567 கி., கலோரி ஆற்றல், 25 கிராம் புரதம், 40 கிராம் கொழுப்பு, 2 கி., தாது உப்புகள், நுண்ணுாட்ட சத்துக்கள் உள்ளன.

No comments:

Post a Comment